கோவை: கோவை மாநகராட்சி தெருவிளக்குகளுக்காக மாதந்தோறும் ரூ.10 கோடி செலுத்தி வரும் நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் ரூ.150 கோடியில் சூரிய ஒளி மின்உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும், பல ஆயிரம் தொழில் நிறுவனங்களை கொண்ட நகரமான கோயம்புத்தூர் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரம் தற்போது 7000 தெருக்களுடன் 100 வார்டுகளுடன் இருக்கிறது. ஆனால் கோவை மாநகரை இன்னமும் பெரிய அளவில் (20 கிமீ சுற்றளவிற்கு) விரிவுப்படுத்த முடியும். அந்த அளவிற்கு கோவை மாநகரம் வளர்ந்துவிட்டது.
கோவை மாநகரில் தற்போது உள்ள 100 வார்டுகளில் தெருவிளக்குகளுக்கு மின்சார கட்டணமாக மாநகராட்சி மாதந்தோறும் ரூ.10 கோடி செலுத்தி வரும் நிலையில், அதை குறைக்க மாநகராட்சி சார்பில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கவுண்டம்பாளையத்தில் 5 மெகாவாட் உற்பத்தி திறனுடன் கூடிய சூரியஒளி மின் உற்பத்தி மையம் உள்ள நிலையில், புதிதாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் ரூ.150 கோடியில் சூரிய ஒளி மின்உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது வெள்ளலூர் குப்பைக்கிடங்கு சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ” கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க உள்ளோம். இந்த மின் உற்பத்தி மையம் மூலம் 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
அந்த மின்சாரம் கோவை போத்தனூரில் உள்ள துணை மின்நிலையத்துக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கு ஈடாக தெருவிளக்கு மின்சார கட்டணம் சரி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சேரும் 600 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படவும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கை தரம் உயர்த்தவும், நவீன எந்திரங்கள் பொருத்தவும் ரூ.245 கோடியில் புதிய திட்டவரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக நகரம் முழுவதும் 2,232 ரிசர்வ் சைட்டுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நிலங்கள் கோவை மாநகராட்சி பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டன. 567 நிலங்கள் இன்னும் பெயர் மாற்றத்துக்காக காத்திருக்கின்றன. மாநகராட்சி நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.