சென்னை: தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி கழகம் (TIDCO), கோவை கணியூர் பகுதியில் 216.83 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் (MMLP) அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்றால் என்ன..? கோயம்புத்தூர்-க்கு இந்த பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் ஏன் அவசியம் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முதல் பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க்-ஐ சென்னை துறைமுக கழகம், ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட், தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக் மேலாண்மை லிமிடெட் (NHLML) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆகியவை இணைந்து “சென்னை MMLP பிரைவேட் லிமிடெட்” என்ற சிறப்பு நிறுவனம் (special purpose vehicle) மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 183 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,428 கோடி செலவில் உருவாகி வருகின்றன. இது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள் அருகே முக்கியமான இணைப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின 2வது பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் கோயம்புத்தூர் கணியூர் பகுதியில் 216.83 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் (MMLP) என்றால் என்ன?: சாலை, ரயில், வான்வழிப் போக்குவரத்து ஆகிய பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் தளம் தான் இந்த MMLP. இந்த சிறப்பு லாஜிஸ்டிக்ஸ் பார்க் மூலம் சரக்குகளை விரைவாகவும் திறமையாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்ப உதவும் ஒரு உள்கட்டமைப்பை வழங்குகிறது.
கோவைக்கு பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் ஏன் முக்கியம்?: கோயம்புத்தூர் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையும் 2வது பெரும் நகரமாகும். கோயம்புத்தூர் மாநகரம் சென்னையை போலவே சேவை மற்றும் உற்பத்தி துறை கலவையானது. கோயம்புத்தூரில் பருத்தி, ஆடை தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழில்களுக்கு பெயர் பெற்றது. இதோடு பெங்களூர், சென்னை-க்கு இணையாக ஐடி துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணமாக, சமீப காலங்களில் கோவை தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
MMLP எப்படி உதவும்?: கோவை தொழில்களுக்கு போக்குவரத்து செலவைக் குறைக்கும்: பல்வகை போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ் பார்க் போன்ற ஒருங்கிணைந்த தளமாக மட்டும் அல்லாமல் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒரே இடத்தில் இணைப்பதன் மூலம், பொருட்களை கோயம்புத்தூரில் இருந்து இந்தியா முழுவதும், உலக நாடுகள் முழுவதும் ஏற்றுமதி செய்ய உதவும். இதன் விளைவாக, போக்குவரத்து செலவுகள் குறைந்து, கோவை தொழில்துறையின் வளர்ச்சி அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: MMLP அமைப்பதும், இயங்குவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Source: Prasanna Venkatesh – Chief sub-editor (Good Returns)
tamil.goodreturns.in